அழகை இரசித்திருக்கின்றீர்களா?
அவர்களை எப்போதுமே நோய் நொடிகள் அண்டியது இல்லை. இயற்கைச் சூழலை நேசிப்பவர்கள் தான் இன்சொல் பேசுகிறார்கள். அவர்கள் பேசும் இன் சொல் நோய்க்கு மருந்தாகிறது.
காலையில் எழுந்ததும் இயற்கைச் சூழலை ஒரு முறை பாருங்கள். உங்களை அறியாமலேயே மனதில் ஒருவித மகிழ்ச்சி தோன்றும். அன்றைய பொழுது மகிழ்ச்சியோடு ஆரம்பமாகும். காலையில் உடம்பில் படுகின்ற சூரிய ஒளியில் இருந்து உங்களுக்கு இயற்கையாகவே வைட்டமின் டி கிடைக்கின்றது. இயற்கைச் சூழலை நேசிக்கும் ஒவ்வொருவரையும் இயற்கையும் நேசிக்கின்றது.
வெளிநாட்டில் உள்ளவர்கள் பெருமளவு பணத்தைச் செலவு செய்து அமைதியான இயற்கைச் சூழலை நாடி வருகிறார்கள். நாம் வாழும் இயற்கை சூழலைப் பற்றித் தெரிந்து வைத்திருக்கின்றோமா? இயற்கைச் சூழலில் சில மணி நேரங்களை செலவு செய்து இருக்கின்றோமா?
இயற்கைச் சூழலை இரசிக்க இரசனை உணர்வு வளரும். மனதில் நம்மை அறியாமலேயே புத்துணர்வு ஏற்படும் என்பதைக் கூடத் தெரியாமல் இருக்கின்றோம்.
மன அழுத்தங்களுடன் வாழும் ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கை தான் துணை நிற்கின்றது என்ற உண்மையை அறிந்து வைத்திருக்கிறோமா ? வீட்டுக்கு வரும் பறவைகளைப் பார்த்துக் கொண்டே இருந்து இருக்கின்றீர்களா? அவை என்ன செய்கின்றன என்று சில நிமிடங்கள் கவனித்திருக்கிறீர்களா? அவற்றுக்கு உணவு கொடுத்து இருக்கின்றீர்களா?
சிட்டுக்குருவியை அறியாதவர்கள் இந்த உலகில் இருக்க முடியாது. காலையில் எழுந்ததும் சிட்டுக்குருவியை பார்க்காமல் இருக்க முடியாது. செல்பேசி வீட்டுக்குள் வந்ததால் சிட்டுக்குருவிகளை காணமுடியவில்லை. அவை அழிவின் விளிம்பிற்கே வந்து விட்டன. சிட்டுக்குருவிகள் அழிவின் விளிம்பிற்கு வந்தமையால் தான் அவற்றை பாதுகாக்க வேண்டும் என்று நினைத்து சிட்டுக்குருவிகள் தினம் கொண்டாடுகின்றார்கள். இந்த உண்மை கூட தெரியுமா? இந்தக் கேள்விகளைக் கேட்டால் அதற்கெல்லாம் நமக்கு நேரம் இல்லை என்று தான் பதில் கிடைக்கும்.
நமது முன்னோர் இயற்கையை நேசிக்கவும் பாதுகாக்கும் முற்பட்டதன் காரணமாகத் தான் அவர்கள் நீண்ட காலம் வாழ்ந்தார்கள். அவர்கள் வாழ்ந்த காலத்தில் பருவகால மழையும் பெய்தது. பருவக் காற்றும் வீசியது.
இன்று மழை வருமா என்று அறிய வானிலை அறிக்கையை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றோம்..இன்று வெப்பம் தாங்க முடியாமல் தவிக்கின்றோம். குடிநீருக்காக அலைகின்றோம். மழை எப்போது வரும் என்று காத்துக் கொண்டிருக்கின்றோம்.
வீடுகள் பிளாஸ்டிக் பொருட்களால் நிரம்பி வழிகின்றன. பிளாஸ்டிக் பொருட்களின் ஆபத்தை நாம் இன்னும் உணரவே இல்லை. பொலித்தீன் பைகளையே இன்றும் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அவற்றைக் கண்ட கண்ட இடங்களில் வீசுகின்றோம். ஆடு, மாடுகள் அவற்றை உண்டு துடிதுடித்து இறக்கின்றன. கண்ட கண்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை வீசுவதால் டெங்கு நோயை நாமே அழைத்து வருகின்றோம்.இன்று நாம் அணியும் மாஸ்க்கை கூட கண்ட கண்ட இடங்களிற்
தான் வீசுகின்றோம். நாங்கள் வீசுகின்ற கழிவுப்பொருட்களை அகற்றுபவர்களும் மனிதன்தான் என்பதை நாம் மறந்து விடுகிறோம்.
இயற்கையின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளோம். இதனாற்தான் இயற்கை அழிவுகள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் இயற்கையை நேசிக்காமல் விட்டாலும் பரவாயில்லை. அதனை அழிக்க முயலாமல் இருந்தால் போதும். இயற்கை உங்களுக்கு தரவேண்டிய எல்லாவற்றையும் தரும்.
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.
Comments
Post a Comment