Monday, May 17, 2021

மூன்று வயதுப் பிள்ளை சுயநலவாதி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?


பிள்ளைகளின் நடவடிக்கைகளைக் கூர்ந்து அவதானித்து அதற்கேற்ற முறையில் பெற்றோர்களும் ஆசிரியர்களும் நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பிள்ளையின் வயதிலும் வளர்ச்சிப் படிகளிலும் அவர்களுடைய தேவைகள், திறமைகள் ஆர்வங்கள் ஆகியவற்றை ஆசிரியர்களும் பெற்றோர்களும் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகும்.

இன்று நாங்கள் மூன்று வயதுப் பிள்ளையை அறிந்துகொள்வோம். புரிந்து கொள்வோம்.

மூன்று வயதுப் பிள்ளை சுயநலவாதி என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? அனுபவம் மிக்க முன்பள்ளி ஆசிரியர்களைக் கேட்டால் அவர்கள் எதுவித தயக்கமும் இன்றி உண்மையென்று கூறுவார்கள்.

மூன்று வயதில் தான் பிள்ளைகள் முன் பள்ளிக்குச் செல்கிறார்கள். மூன்று வயதில் பிள்ளைகள் பெரும்பாலும் தன்னைப் பற்றியும் தன் தேவைகளைப் பற்றியும் மட்டுமே சிந்திக்கிறார்கள்.மற்றவர்களும் தன்னைப் போன்றவர்களே! அவர்களுக்கும் தன்னைப் போன்று எண்ணங்களும் உணர்வுகளும் உள்ளன என்பதை அவர்கள் உணர்வதில்லை.

தனியாக விளையாடுவதையே பெரிதும் விரும்புவார்கள். அந்த வயதில் குழுவாக விளையாட அவர்களுக்குத் தெரியாது. குழு விளையாட்டுக்களில் அவர்களால் ஈடுபட முடியாது.

மூன்று வயதுப் பிள்ளைகள் தமது விளையாட்டு பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள அவர்கள் விரும்புவதில்லை. தங்களுடைய விளையாட்டுப் பொருட்களை யாராவது எடுத்து விட்டால் அழுது அடம் பிடிப்பார்கள்.

மூன்று வயதில் முதன்முறையாக அம்மாவை பிரிந்து பள்ளிக்குச் செல்லும் பிள்ளைகள்  முன்பள்ளி ஆசிரியர்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்வார்கள். மற்றவர்களைக் கூர்ந்து கவனித்துப் பின்பற்றுவார்கள். கற்றுக் கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அவர்களிடம் நிறையவே இருக்கும் ஆனால் அவர்கள் மிகக் குறைந்த வேகத்திலேயே செயற்படுவார்கள் தொடர்ந்து ஒரே இடத்தில் அமர்ந்து செயற்பட விரும்பமாட்டார்கள். விரைவாகச் சோர்ந்து விடுவார்கள். மூன்று வயதுப் பிள்ளைகள் - செய்ததை திரும்பத்  திரும்பச் செய்வதையே மிகவும் விரும்புவார்கள்.

அதனால் தான் மூன்று வயதுப் பிள்ளைகளுக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தப்படும் விளையாட்டுகள் மிக எளிமையாகவும் அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி தரக்கூடியதாகவும் குறுகிய நேரத்தில் விளையாடி முடிக்க கூடியதாகவும் இருக்க வேண்டும் வலியுறுத்தப்படுகின்றது.

கைகளுக்கும் விரல்களுக்கும் நிறையப் பயிற்சிகளை இந்த வயதுப் பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும். பாடல்களை மூன்று வயதுச் சிறுவர்கள் மிகவும் விரும்புவார்கள். திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான இராகம் மற்றும் வரிகள் கொண்ட சிறிய பாடல் விளையாட்டுக்களை அவர்கள் பெரிதும் விரும்புகின்றார்கள். அப்பாடல் விளையாட்டுக்கள் தான் அவர்களை பெரிதும் ஈர்க்கின்றன.

வட்டமாக எல்லோரும் அமர்ந்து அல்லது நின்று விளையாடும் விளையாட்டுக்கள் அவர்களைப் பெரிதும் கவர்ந்தவை. விளையாட்டுகளின் போது தமது முறை வரும் வரை காத்திருக்க மாட்டார்கள். காத்திருப்பது என்பது அவர்களுக்கு பிடிக்காது. அதிக நேரம் அவர்கள் காத்திருக்கும் வகையிலான விளையாட்டுக்களை மூன்று வயதுப் பிள்ளைகளுக்கு ஆசிரியர்கள் தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

கூச்சல் போட்டு அல்லது சத்தமிட்டு ஓடியாடிச் சுறுசுறுப்பாக இயங்கும் விளையாட்டுக்களை அவர்கள் விரும்பும் விளையாட்டுகள் ஆகும். மூன்று வயதுப் பிள்ளைகளுக்கு எக்காரணம் கொண்டும் போட்டி விளையாட்டுகளை அறிமுகம் செய்யக் கூடாது. போட்டி விளையாட்டுக்கள் தாழ்வு மனப்பான்மையை அவர்கள் மனதில் உருவாக்கி விடும். அவர்களின் ஆர்வம் குறைந்துவிடும். எனவே போட்டி விளையாட்டுகளை முன் பிள்ளைப் பருவத்தில் அறிமுகம் செய்வதை ஆசிரியர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

முன்பள்ளி ஆசிரியர்கள் மூன்று வயதுப் பிள்ளைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாவிடில் அவர்களுக்கு ஏற்ற முறையிலான கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளில் ஈடுபட முடியாது.. பெற்றோர்கள் மூன்று வயதுப் பிள்ளைகளைச் சரியாக புரிந்து கொள்ளாவிடில் அவர்களைச் சரியாக வழி நடத்த முடியாது.

பிள்ளைகளைக் கையாள்வதை அறிந்திராத ஆசிரியர்களாலும் பெற்றோர்களாலும் பிள்ளைகளின் எதிர்கால வாழ்வும் அவர்களின் இலட்சியங்களும் கனவுகளும் சிதைக்கப்படுகின்றன

மூன்று வயதுப் பிள்ளைகளைச் சரியாகப் புரிந்து கொள்ளாத பெற்றோர்கள் அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன்  ஒப்பிட்டு பேசுவதில் பயன் என்ன கிடைக்கப் போகின்றது. பிள்ளையை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிடுவதால் பிள்ளைகளின் மனநிலை பாதிக்கப்படுகின்றது என்பதை எப்போதாவது பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிந்தித்து இருக்கின்றார்களா? ஒரு பிள்ளையை இன்னொரு பிள்ளையுடன் ஒப்பிடக் கூடாது  என்ற உண்மையை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்

மூன்று வயது - பிள்ளைகளின் வாழ்க்கையில் முக்கியமான வயது என்பதை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த வயதுப் பிள்ளைகளின் விருப்பு வெறுப்புகளைப் புரிந்து  கொள்ளாமல் மேற்கொள்ளப்படும் கற்றல் - கற்பித்தல் நடவடிக்கைகள் என்றுமே வெற்றி அளிக்கப் போவதில்லை.

கல்வி என்பது பிள்ளையின் இயல்பான வளர்ச்சிக்கு உதவுவதாகும்.  உடல், உள்ளம், ஒழுக்கம் ஆகிய எல்லா கூறுகளின் வளர்ச்சியும் இதனுள் அடங்கும் “  என்று கூறுகின்றார் பெஸ்டலொசி (Pestalozzi). இந்த உண்மையைப் புரிந்து கொள்ளுங்கள்.

“விளையாட்டு என்பது அன்பு கொள்ளுதல் ஆகும்.”.என்று கூறுகின்றார் கிண்டர்காடின் தத்துவத்தின் தந்தை என அழைக்கப்படும்  பிரெட்ரிக் புரோபெல். பிள்ளைகள் ஏன் விளையாடுகிறார்கள் என்பதை ஆசிரியர்களும் பெற்றோரும் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். குழந்தைப் பருவத்தின் இயல்பு விளையாட்டு. சுதந்திரமாக விளையாட அனுமதிக்கப்பட்ட பிள்ளைகள் அங்குமிங்கும் ஓடியாடி பல்வேறு செயல்களில் சுயமாக ஈடுபட்டு சொந்தமாகச் சிந்திக்கும் திறன்களைப் பெறுகின்றார்கள் என்ற உண்மை உங்களுக்குத் தெரியுமா

இந்த உண்மையைப் புரிந்து கொள்ளும் ஒவ்வொரு பெற்றோரும் பிள்ளைகள் விளையாடுவதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள்

பிள்ளைகள் மீது உங்கள் கனவுகளைத்  திணிக்காதீர்கள். பிள்ளைகளைஅறிந்து கொள்ளுங்கள்; பிள்ளைகளைப் புரிந்து கொள்ளுங்கள். பிள்ளைகளின் எதிர்காலம் உங்கள் கைகளில் இருக்கின்றது என்பதை நினைவிற் கொள்ளுங்கள். மறந்து விடாதீர்கள்


மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்.

No comments:

Post a Comment

பூக்கள் என்றாலே கொள்ளை அழகுதான்!

பூக்கள் என்றாலே கொள்ளைஅழகுதான் . சுற்றுச்சூழலை சுற்றுப்புறச்சூழலை அழகுபடுத்துவதில் பூக்கள் முக்கிய பங்கை வகிக்கின்றன . நோய் தீர்க்க...