Pages

எனது இணையத்தளத்திற்கு வருகை தந்த உங்கள்அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். மீண்டும் வருக. www.udayasanthiran.blogspot.com

Thursday, June 8, 2017

அறிதிறன்பேசியில் குறும்பனுவல் - அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட உண்மைஇன்றைக்கு அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) குறும்பனுவல் (டெக்ஸ்டிங்) அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்னவோ உண்மை. இத்தகைய கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) அனுப்புவோர் தம் மூளையில் உண்டாகும் அதிர்வலைகள் வழக்கமான மனிதர்களின் மூளைத் தாளலயத்தைவிட மாறுபட்டதாகத் தெரிகிறது என்பது ஒரு அதிர்ச்சி தகவல். "வலிப்புநோய் மற்றும் நடத்தைப் பாங்கு' எனும் அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட உண்மை இது.

அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் "மாயோ கிளினிக்' ஆய்வக நரம்பியல் துறைப் பேராசிரியரும் வலிப்பு நோயியல் மருத்துவருமான வில்லியம் தாத்தும் என்பவர் தலைமையிலான குழு இது குறித்து ஆராய்ந்தது.

129 இளைஞர், இளம்பெண்களைத் தேர்ந்தெடுத்து, நண்பர்களுக்கு குறும்பனுவல்கள் அனுப்பச் சொல்லி கவனித்தனர். அத்தருணங்களில் அவர்களின் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் அதிர்வலைகளை "இ.இ.ஜி.' எனும் மின்மூளைப் பதிவுகளால் 16 மாத காலம் ஆராய்ந்தனர்.

பெரும்பாலும் 22 வயதை ஒட்டிய இளைஞர்கள் தொடுதிரையில் வலது கை விரலாலேயே தகவல் பதிவு இடுகிறார்கள் என்பது பொது முடிவு. அவர்களில் ஐந்தில் ஒருவருக்கு "பனுவல் உணர்வு லயம்' வித்தியாசம் ஆனதாகப் பதிவாகியதாம்.

பாலியல், வயது, வலிப்பு வகை, மூளை அழுத்தம் போன்ற இயல்புகளில் எந்தவித பேதமும் இன்றி, மூளையின் இயக்க நரம்பிலும் செவி-வாய்ப்புலன்களின் நரம்புச் செயல்பாட்டிலும் தனித்தன்மை தென்பட்டதாம். வாயால் அல்லாமல், கையால் பதிவு இடும்போது அவர்களது கவனமும் உணர்வும் மூளையில் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்கிறது அந்த ஆய்வு.

அறிதிறன்பேசியில் குறும்பனுவல் அனுப்பும்போதுதான் என்று இல்லை. "ஐ-பாட்' என்னும் மின்குறிப்பேட்டில் எழுதும்போதும் கணிப்பொறி விளையாட்டில் ஈடுபடும்போதும் இதே நிலைதானாம். இந்த வகையில் மேலும் சில ஆராய்ச்சிகள் தேவைப்படும் என்ற கருத்தும் நிலவுகிறது.

அறிதிறன்பேசியில் முகநூல், சுட்டுரை (ட்விட்டர்) வழியே முன்பின் கண்டிராதவர்கள்கூட தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றனர். ஓய்வு நேரங்களிலும் தங்கள் குழந்தைகளிடம் உரையாடுவதைக் கூட தவிர்த்து அறிதிறன்பேசியில் பொழுதைப் போக்குபவர்களால் குடும்பமும் சமூகமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்த இளைய தலைமுறையினர் மீது பெற்றோர்களின் நுண்கண்காணிப்பு அவசியம்தானே? "குழந்தைகள் மற்றும் ஊடகங்கள் சஞ்சிகை' என்ற ஆங்கில இதழ் இவ்வகையில் ஒரு கள ஆய்வு நடத்தியது.

அமெரிக்காவில் நான்கு நகரங்களில் 12 முதல் 18 வயதுக்கு உட்பட்ட ஆண்-பெண் இருபாலரையும் ஒன்பது குழுக்களாகப் பிரித்து ஆராய்ந்தனர். செல்பேசி வாங்கித் தந்தது யார்? அதைக் கையாள்வதில் பெற்றோர்களின் கவனிப்பு உள்ளதா? ஆண்-பெண் தகவல் பரிமாற்றங்கள் எவ்விதம் அமைகின்றன? என்று பலவிதமான கேள்விகள் தொடுக்கப்பட்டன.

ஆண்கள், பெண்கள் இருபாலரின் மொழிநடையில் சற்றே வேறுபாடு தெரிந்தது. வாலிபர்கள் செல்லிடப்பேசியைத் தங்கள் அந்தஸ்தின் அடைளமாகக் காண்கிறார்கள். பல சந்தர்ப்பங்களில் இளம்பெண்களிடம் பாலியல் தொடர்பாகவும் உரையாடுகின்றனராம். 12 முதல் 17 வயதுடையவர்கள் தினம் 60 குறுஞ்செய்திகள் அனுப்பி மகிழ்கின்றனர்.

ஒருதலைக் காதல் என்றாலோ, பொருளாதாரப் பிரச்னை என்றாலோ, அலுவலகத்தின் அதிகாரிகள் இம்சை என்றலோ விரக்தியினால் உயிர் துறந்து முக்தி அடையவும் அவர்கள் தயங்குவது இல்லை.

இங்கிலாந்தைப் பொருத்தமட்டில் பொதுவாகவே விரக்திக்கு எதிரான மருந்துகள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். அங்குள்ள உடல்நலம் மற்றும் சமூக நலத் தகவல் மையம் தரும் புள்ளிவிவரம் இது. 

ஏறத்தாழ 2.94 கோடியாக இருந்த விரக்தியடைந்தோர் தொகை, பத்தாண்டுகளில் 6.1 கோடியாக உயர்ந்துவிட்டது. சித்தலோப்ரம் ஃபுளோவோக்செட்டின் போன்ற மனத்தளர்வு நீக்கி மருந்துகளின் விற்பனை அமோகமாம். இது ஒருவகை மனநோய் என்கிறார் கில்லியன் கன்னோர். இவர் "மனநோய் மாற்றுச் சிந்தனை' என்ற அமைப்பின் மருத்துவ ஆலோசகர்.

சில சமூகவியல் திறனாய்வு அறிஞர்களோ, முதலில் அத்தகைய நோயாளிகளிடம் நேரில் பேச்சுக் கொடுங்கள் என்கிறார்கள். பேச்சுமுறை சிகிச்சை நல்ல பலன்தருமாம்.

இதில் இன்னொரு புதுக்குழப்பம் உருவாகி வருகிறது. ஜோன் லீ என்னும் மொழியியல் ஆய்வறிஞர் தமது அறிக்கையில் மேலும் சில உண்மைகளைக் குறிப்பிடுகின்றார்.

குறுஞ்செய்தி அல்லது குறும்பனுவல் பரிமாறுவோர் கையாளும் வார்த்தைகளை அர்த்த வியாக்கியானம் செய்வதிலும் ஏற்றுக் கொள்வதிலும் மொழித்திறன் சார்ந்த பிரச்னைகளும் எழுகின்றனவாம். பிறரைத் துன்புறுத்தும் வகையில் தங்கள் முகநூலிலும் "டுவிட்டர்' என்கிற சுட்டுரையிலும் பதிவாக்கி, குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களும் இருக்கிறார்கள்.

மேனாட்டில் பல்கலைக்கழக மாணவர்களிடம் இதுகுறித்து ஓர் ஆய்வு நடத்தப்பட்டது. அவர்களிடம் சில சம்பிரதாயமான வழக்குச் சொற்களும் வேறு சில புதிய புனைவுச் சொற்களும் தரப்பட்டன.

தனிப்பட்ட தகவல் அனுப்புவதால், சுட்டுரைக் குழுவினர் அனைவருக்குமே இலக்கண வரம்பு மீறிய மொழியில் எழுதும் துணிச்சல் வரும் என்று நாம் எண்ணுகிறோம். ஆனால் அதுதான் இல்லை. 

புத்தகங்கள், சஞ்சிகைகள், செய்தித்தாள்கள் போன்ற வழக்கமான அச்சு ஊடகங்களில் நிறைய வாசிப்பவர்களுக்கோ புதிய சொற்களை ஏற்பதில் சிக்கல் ஏதும் இல்லை. எந்தச் சொல்லையும் நவீன எழுத்துப் பிழைகள் உட்பட, தாங்களாகவே திருத்தி அர்த்தப்படுத்தி ஏற்றுக் கொள்கின்றனர்.

பாருங்களேன், ஆங்கிலத்தில் "ஒய்-ஓ-யு' என்கிற மூன்று எழுத்துச் சொல்லை "யு' என்று உச்சரிக்கிறோம். "நீ' என்று பொருள். ஆனால் நவீன தலைமுறைத் தகவல் இளைஞர்கள் "யு' என்ற ஒரே எழுத்தில் செய்தி அனுப்புகிறார்கள். அங்கு "இருந்து' ("ஃப்ரம்') என்பதை ஆங்கிலத்தில் "எஃப்.ஆர்.எம்.' என்று எழுதுவர். அதனை "நோக்கி' ("டூ') என்பதை உச்சரிக்கிறபடியே 2 என்ற எண்ணால் குறிக்கின்றனர்.

அவ்வாறே, வழக்கமான அச்சு ஊடகங்களில் படிப்பவர்கள் புதுப்புதுச் செய்திகளை அறிந்து கொள்கிறார்கள். அதனாலே அவர்களின் படைப்பாற்றலும் அதிகரிக்கிறது.

ஆனால் பல் தேய்ப்பது முதல் படுக்கச் செல்வது வரை நிறைய தகவல் அனுப்பியும் வாசித்தும் நேரத்தைச் செலவழிப்பவர்களிடம் படைப்பாற்றல் குறைந்து வருகிறதாம். "இப்படியும் ஒரு புதுச் சொல்லாட்சி இருக்கலாம்தானே' என்று ஒப்புக்கொள்ளாமல் நிராகரிக்கிறார்கள். பழைய சொற்களையே புழங்குகின்றனர் என்கிறார் ஜோன் லீ.

ஆனால் மொழிநடையில் மட்டும் மரபான இலக்கணம் கூடாது என்று நினைக்கிறார்களாம். இப்படி ஒரு முரண். பண்டித நடையை அவர்கள் மறுக்கிறார்கள். இந்த இளைஞர்கள் எவரோ சொன்னதையே தாங்களும் திரும்பத் திரும்ப ஒப்புவித்துக் கொண்டு இருக்கிறார்கள். 

தமிழில் நகைச்சுவை என்றால் பெரும்பாலும் கணவன் - மனைவி உறவுவைக் கேலி செய்யும் துணுக்குகள்தாம். கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) உலா வரும் நகைச்சுவைத் துக்கடாக்கள் வாராந்தரப் பத்திரிகைகளில் மறுஅச்சுப் பெறுவதையும் காண்கிறோம்.

பல் வெள்ளியாகத் துலங்கினால்தான் வாய்திறந்து பேசுகிறபோதும் சிரிக்கிறபோதும் தன்னம்பிக்கை வெளிப்படுத்த முடிகிறதாம். ஒரு மேனாட்டு பெண் ஆலோசகர் பரிந்துரை இது. கடைகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகள் கிடைக்காமல் குழந்தைக்கு எதை வாங்கிக் கொடுப்பது என்று ஏங்குகிறார் இன்னொரு குடும்பத் தலைவி. மருத்துவர் குறிப்பு இன்றி குழந்தைக்கு எதையும் வாங்கிக் கொடுப்பது தவறு அல்லவா? 

நம் நாட்டில் வேட்டி விளம்பரம் நீங்கலாக வேறு எல்லாப் பொருளுக்கும் பெண்மணிகளே வந்து சொல்லவேண்டும் என்று நினைக்கிறோம்.

மேனாடுகளில் கேட்கவே வேண்டாம். 2013-ஆம் ஆண்டு திரைக்கு வந்தது ஓர் ஆங்கிலத் திரைப்படம். "ஹெர்' என்பது தலைப்பு. வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு. அது, "சமந்தா' என்னும் "செயற்கை அறிவாண்மை' (ஆர்ட்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) கொண்ட மின்னணுத் திரையுடன் தியோடார் என்னும் மனிதன் காதல் வயப்படுவதைச் சித்தரிக்கும் படம்.

எதிர்காலத்தில் நீங்கள் விரும்பினால் உங்களுடன் "மாய'க் காதலன் அல்லது காதலி ஆகத் தயார் என்று செயற்கை அறிவாண்மை இயந்திர விளம்பரம் தூள் கிளப்புமாம். இது நடைமுறை சாத்தியமா என்ற கேள்விக்கு அமெரிக்காவில் வாய்ப்பு இல்லை என்று 47 சதவீதம் பேர் கைவிரித்து உள்ளனர். 35 சதவீதம் பேர் சாத்தியம் என்றும் கருத்து இல்லை என 18 சதவீதம் பேரும் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமா? குடும்பத்தோடு ஒட்டாமல், தனியே விளையாடும் குழந்தைகளுக்கு மின் இயந்திரப் பேசும் பொம்மைகள் விற்பனைக்கு வந்துவிட்டன. கல்வி போதிக்கும் கருவிகளும் நடைமுறையில் உள்ளன. "ட்ராக்டிகா' என்ற அமைப்பின் கணிப்பீட்டின்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்த சேவை இயந்திரங்களின் தொகை ஏறத்தாழ நாலரை மடங்காகி விடும்.

எப்படியோ, "கூடி விளையாடு பாப்பா' என்பது இனி பழங்கதையாய் ஆகி இருக்கும் என்பதுதான் நம் கவலை.


நன்றி: தினமணி
கட்டுரையாளர்:  நெல்லை சு. முத்து,  இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
Download As PDF

1 comments:

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

பயனுள்ள தகவலோடு
அருமையான வெளியீடு

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

மின்னஞ்சல் ஊடாகக் கருத்துத் தெரிவிக்க

Name:
Email:
Comment: