Pages

எனது இணையத்தளத்திற்கு வருகை தந்த உங்கள்அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். மீண்டும் வருக. www.udayasanthiran.blogspot.com





Monday, June 26, 2017

பிள்ளைகளை வீட்டில் வேலை செய்ய வழிப்படுத்துங்கள்.


பிள்ளைகளை ஏன்  வீட்டுவேலை செய்ய வழிப்படுத்த வேண்டும். வீட்டைச் சுத்தமாக வைத்துக்கொள்வதற்காக மட்டுமல்ல, அவர்களுடைய முன்னேற்றத்துக்கும் அப்பயிற்சி இன்றியமையாதது. ரியூசன்,ஹோம் வொர்க், பயிற்சி என்று வாரம் முழுக்கப் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒன்று இருந்து கொண்டே இருப்பதால் பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு வேலை கொடுக்க தயங்குகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் வேலை செய்வதால் அவர்களுக்குக் கிடைக்கும்  நன்மைகள் பற்றிப் பெற்றோர்கள் சிந்தித்துப் பார்ப்பதில்லை.


சில பெற்றோர்கள பிள்ளைகள் முணுமுணுக்காமல் வீட்டுவேலைகளைச் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால், வேறு சில பெற்றோர்கள் அப்படி எதிர்பார்ப்பதே கிடையாது. அதனால், பிள்ளைகளும் எந்த வேலையும் செய்யாமல்  இன்டர்நெட், ரிவி, வீடியோ கேம்ஸ்  என்று அதில் அடிமையாகி  வருகிறார்கள்.  பெற்றோர் அவர்களைக் கண்டுகொள்வதுமில்லை.  அவர்களுக்கு எந்த வேலையும் செய்யச் சொல்வதுமில்லை. அதனால் பிள்ளைகள், குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவ வேண்டுமென்று நினைப்பதில்லை. அதற்கு பதிலாக, மற்றவர்கள்தான் தங்களுக்குச் சேவை செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

வீட்டில் வேலை செய்யும் பிள்ளைகளுக்கு தன்னம்பிக்கையும் மன உறுதியும் அதிகமாகின்றது. அத்தோடு, அவர்களுடைய வேலைகளை அவர்களே செய்யக் கற்றுக்கொள்வார்கள். அதனால், பள்ளியில் நல்ல பெயர் எடுப்பார்கள், படிப்பிலும் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். மற்றவர்களுக்கு உதவி செய்ய கற்றுக்கொள்வார்கள். அது பிள்ளைகளின் முன்னேற்றத்துக்கு உதவும். 

வீட்டில் அப்பா-அம்மாவுக்கு உதவி செய்கிற பிள்ளைகளே, வளர்ந்து பெரியவர்களான பிறகு சமூக சேவை செய்ய முன்வருவதாக ஆய்வுகள் கூறுகின்றன.  இதற்குக் காரணம், வீட்டுவேலைகளைச் செய்யும்போதே தங்களுடைய விருப்பங்களைவிட மற்றவர்களுடைய தேவைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் பிள்ளைகள் பழகிக்கொள்கிறார்கள். பெற்றோர்கள் பிள்ளைகளிடம்  வீட்டு வேலை செய்யச் சொல்லா விடில்  மற்றவர்கள்தான் தங்களுக்குப் பணிவிடை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைகளுக்கு வந்துவிடும். அவ்வெண்ணம் அவர்கள் சமூகப் பொறுப்புள்ளவர்களாக வளரத் தடையாக அமையும்.  அத்தடன், கடினமாக உழைத்த முன்னேற வேண்டுமென்ற  எண்ணமும் அவர்களிடம் தோன்றாது.

வீட்டுவேலைகளைச் செய்யும் பிள்ளைகள்  குடும்பத்தோடு ஒற்றுமையாக இருக்கக் கற்றுக்கொள்வார்கள்.  குடும்பத்தில் தாங்களும் ஒருவர் என்பதையும்  தங்களுக்கும் குடும்பத்தில் பொறுப்பு இருக்கிறது என்பதையும் புரிந்து கொண்டு செயற்படுவார்கள். பிள்ளைகளின் படிப்புக்கும் ரியூசன் செல்வதற்குமே பெற்றோர் முக்கியத்துவம் கொடுத்தால் இந்த எண்ணம் அவர்களுக்கு என்றுமே வராது. 

படிப்பிலும் விளையாட்டிலும் மட்டும் என் பிள்ளை கெட்டிக்காரனாக இருந்து குடும்பத்தோடு எந்த ஒட்டும் உறவும் இல்லாம இருந்தால் என்ன பிரயோஜனம்? உங்களை நீங்கள் இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமல்ல பிள்ளைகள் ஏன்  பெற்றோரை வயதான காலத்தில்  வயோதிப இல்லங்களில் சேர்த்து விடுகின்றார்கள் என்றும் சிந்தியுங்கள்.

முன்பள்ளிப் பருவத்திலிருந்தே  வீட்டு வேலைகளைக் கொடுக்க ஆரம்பியுங்கள். மூன்று வயதிலிருந்தே பிள்ளைகளுக்கு சின்ன சின்ன வேலைகளைக் கொடுக்கலாம். அப்பா-அம்மாவோடு சேர்ந்து அவர்கள் செய்வதைப் பார்த்து அப்படியே செய்வது சிறிய பிள்ளைகளுக்கு மிகவும் பிடிக்கும். எனவே வயதிற்கு ஏற்ற வேலைகளைக் கொடுங்கள்.

மூன்று வயது பிள்ளைகளிடம் விளையாட்டுப்  பொருட்களை எடுத்து வைக்கச் சொல்வது, காய்கறிகளை  எடுத்துத் தரச் சொல்வது, போன்ற வேலைகளைச் சொல்லலாம். கொஞ்சம் வளர்ந்த பிள்ளைகளிடம் பூங்கன்றுகளுக்கு நீர் ஊற்றச்  சொல்லலாம், அல்லது உணவைத் தயாரிக்கும் போது பொருட்களை எடுத்துக் கொடுத்து உதவச் சொல்லலாம். அவர்களால் செய்ய முடிந்த வேலைகளைக் கொடுங்கள். நாட்கள் போகப் போக, அவர்கள் எந்தளவுக்கு உற்சாகமாக வேலைகளைச் செய்கிறார்கள் என்பதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்!

பிள்ளைகள் வீட்டுவேலைகளைச் செய்வது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். பிள்ளைகளுக்கும் நயமாகப் புரிய வையுங்கள். பிள்ளைகளுக்கு பாடசாலையில் வழங்கப்படும்  ஹோம் வொர்க் மலைபோல் குவிந்திருந்தால் வீட்டுவேலை செய்வது அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். இருந்தாலும், பிள்ளைகள் நன்றாகப் படிக்க வேண்டும் என்பதற்காக வீட்டுவேலையே கொடுக்காமல் இருந்தால் நீங்கள் முக்கியமான காரியங்களுக்கு முதலிடம் கொடுக்கவில்லை என்றுதான் அர்த்தமாகும்.

ஒரு வேலையைச் செய்து முடிக்க நீங்கள் எதிர்பார்த்ததைவிட அதிக நேரத்தை உங்கள் பிள்ளை எடுத்துக்கொள்ளலாம். அதை நன்றாக செய்யாமல்கூட போயிருக்கலாம். இருந்தாலும் நீங்கள் தலையிடாதீர்கள். பெரியவர்களைப் போல் ஒரு வேலையை அவர்கள் சரியாகவும் விரைவாகவும்  செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்காதீர்கள். ஏனென்றால், அது உங்கள் குறிக்கோள் கிடையாது. பிள்ளைகளைப் பொறுப்புள்ளவர்களாக ஆக்குவதும், வேலை செய்வதில் கிடைக்கும் சந்தோஷத்தைப் புரிய வைப்பதும்தான் உங்கள் குறிக்கோளாகும் என்பதனை நினைவிற் கொள்ளுங்கள்.

வீட்டில் வேலை செய்வதற்காக பணம் கொடுக்காதீர்கள். வீட்டில் வேலை செய்வதற்காக பிள்ளைகளுக்குப் பணம் கொடுத்தால் அவர்கள் பொறுப்புள்ளவர்களாக ஆகமாட்டார்கள். அப்படிச் செய்தால், பணமோ பரிசோ கிடைக்கும் என்பதற்காக வேலை செய்வார்களே தவிர, குடும்பத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது எமது கடமை என்று நினைக்க மாட்டார்கள். அதுமட்டுமல்ல, தேவையான அளவுக்கு பணம் கிடைத்துவிட்டால் வீட்டில் வேலை செய்வதை நிறுத்திவிடுவார்கள். கடைசியில், அவர்களை வேலை செய்யும்படி சொல்வதற்கான நோக்கமே நிறைவேறாமல் போய்விடும். அதனால், வீட்டில் வேலை செய்வதற்கெல்லாம் எக்காரணங் கொண்டும்  பிள்ளைகளுக்குப் பணம் கொடுக்காதீர்கள்.

வீட்டுவேலைகளைச் செய்யும்போது, குடும்பத்துக்காக நானும் ஏதோ செய்தேன் என்ற உணர்வு வரும். ஒருநாள் முழுதும் வீட்டில்  உள்ள வேலைகளை நாங்கள் எல்லாரும் சேர்ந்து செய்து  முடிக்கும்போது எங்களுக்குள் இருக்கும் நெருக்கம் இன்னும் அதிகமாகும்.

வீட்டுவேலைகளைச் செய்யும் பிள்ளைகள் படிப்பில் கெட்டிக்காரர்களாக இருப்பார்கள். அதோடு, அவர்களுக்கென்று ஒரு குடும்பம் வரும்போது அதை நல்லபடியாக கவனித்துக் கொள்வார்கள். வயதானாலும் அவர்கள் அதை விட்டு விலகவும் மாட்டார்கள். பெற்றோரை வயோதிபக் காலத்தில் வயோதிப இல்லத்தில் சேர்க்கவும் மாட்டார்கள். வயதான பெற்றோருக்குப் பணிவிடை செய்வதைப் பாக்கியமாகக் கருதுவார்கள்.


சரியான வழியில் நடக்கப் பிள்ளைகளை வழிப்படுத்துங்கள்.  அவர்கள் நாட்டிற்கும் வீட்டிற்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.


Download As PDF

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

மின்னஞ்சல் ஊடாகக் கருத்துத் தெரிவிக்க

Name:
Email:
Comment: