Pages

எனது இணையத்தளத்திற்கு வருகை தந்த உங்கள்அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள். மீண்டும் வருக. www.udayasanthiran.blogspot.com

Saturday, October 8, 2016

கொலம்பிய சிவில் யுத்தமும் அமைதிக்கான நோபல் பரிசும்உலகின் மிக உயரிய விருதாக கருதப்படும், நோபல் பரிசு இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


மக்கள் நலன் மற்றும் அமைதிக்காக பாடுபட்டோருக்குகாக, வழங்கப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு இம்முறை 376 பிரபலரங்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. இதற்கு முன்பு 2014 ஆம் ஆண்டு 278   பிரபலரங்களின் பெயர்கள் சிபாரிசு செய்யப்பட்டன. இம்முறை தான்; இந்த அளவுக்கு மிக அதிகமான நபர்கள் பெயர்கள்; சிபாரிசு செய்யப்பட்டிருந்தமை சுட்டிக்காட்டுதற்குரியது.

ஈரானுடன் அணு அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்திய அமெரிக்காவின் ஜான் கெர்ரி, ஈரானின் ஜாவிர் ஷெரீப், ஐரோப்பிய யூனியன் வெளிவிவகார கொள்கை தலைவர் பெடர்சியா மொகரினி, ரஷியாவை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் செவத்லானா குன்னூஸ்கினா ஆகியோர் சிபாரிசு செய்யப்பட்டவர்களுள் முக்கியமானவர்களாவர்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, கொலம்பியாவில், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர, அரும் பணியாற்றிய, அந்நாட்டு அதிபர் ஜூவான் மேனுவல் சான்டோசுக்கு (Juan Manuel Santos), அமைதிக்கான நோபல் பரிசு(2016) வழங்கப்படுவதாக, நோபல் பரிசு கமிட்டி அறிவித்துள்ளது.

மேஜிக்கல் ரியலிச இலக்கிய மேதை காப்ரியல் கார்சியா மார்க்வேஸ் (Gabriel García Márquez) இலக்கியத்துக்கான நோபலை 1982 ஆம் ஆண்டு வென்றதற்கு அடுத்தபடியாக, தற்போது கொலம்பிய அதிபர் யுவான் மேனுவெல் சாண்டோஸ் அமைதிக்கான நோபல் பரிசை வென்று அந்நாட்டு மக்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்.நவீன உலகில்; கொலம்பிய சிவில் யுத்தம் தென் அமெரிக்காவில் இன்றும் உயிர்ப்புடன் இருக்கும் ஆயுத எழுச்சியாகும். கொலம்பியா நாட்டில் அரசு படைகளுக்கும், 'பார்க்' கிளர்ச்சியாளர்களுக்கும் (மார்க்சிஸ்ட் கொரில்லா படையினர்) இடையே 1964 ஆம் ஆண்டு தொடங்கி 52 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. 52 ஆண்டுகால சிவில் யுத்தம் சுமார் 2,20,000 உயிர்களை பலிவாங்கியுள்ளது. சுமார் 60 லட்சம் மக்களை புலம்பெயரச் செய்துள்ளது.

இந்த உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வர அந்த நாட்டின் அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், பார்க் கிளர்ச்சியாளர்களுடன் 4 ஆண்டுகள் சமரசப்பேச்சு வார்த்தை நடத்தி அதில் வெற்றி கண்டார்.

கொலம்பியாவில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியாக, அரசுக்கும், புரட்சிகர அமைப்பின்(பார்க்) தலைவர் ரோட்ரிகோ லண்டனோவுக்கும் இடையே முதல் கட்ட அமைதி ஒப்பந்தம்  ஜூன்  மாதம் 26 ஆம் தேதி கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தத்தை உறுதி செய்வது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக சுமார் 13 மில்லியன் கொலம்பியர்கள் வாக்களித்தனர், அதாவது 50.24 வீதத்தினர் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இதனால் கொலம்பியாவின் எதிர்காலமே கேள்விக்குறியானது. அமைதி நடைமுறை நிறுத்தப்பட்டு சிவில் யுத்தம் மீண்டும் மூளும் அபாயம் ஏற்பட்டது

பெரும்பான்மை மக்கள் அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தார்கள் என்பதால் அமைதி நடைமுறையை இல்லாமற் செய்து விட்டது என்ற அர்த்தமல்ல. அமைதி ஒப்பந்தத்திற்கு எதிராக வாக்களித்தவர்கள் அமைதிக்கு எதிரானவர்களல்ல. மாறாக அமைதி ஒப்பந்தத்தின் குறிப்பிட்ட அம்சங்களை எதிர்த்தவர்கள் என்பது சுட்டிக்காட்டுதற்குரியது. அதே வேளை அந்த உடன்பாடு புதுப்பிக்கப்படும், அமைதி நிலைநிறுத்தப்படும் என கொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

52 ஆண்டு கால சிவில் யுத்தம் சுமார் 2,20,000 உயிர்களை பலிவாங்கியுள்ளது. சுமார் 60 லட்சம் மக்களை புலம்பெயரச் செய்துள்ளது. இந்த நோபல் பரிசு நியாயமான அமைதிக்காக பல இன்னல்களை அனுபவித்து போராடிய கொலம்பிய நாட்டு மக்களுக்கு அளிக்கும் அர்ப்பணிப்பு என்று நோபல் கமிட்டி தங்களது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, அந்தக் குழுவின் தலைவர் கசி குல்மேன் ஃபைவ், நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் தெரிவித்ததாவது:
உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டுள்ள கொலம்பியா, தற்போது மேலும் சீர்குலையும் அபாயக் கட்டத்தில் உள்ளது. இந்நிலையில், அங்கு அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளை ஊக்குவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த விருது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கு முயன்று வரும் அனைத்து தரப்பினரையும் ஊக்குவிக்கும் என்று தாம் நம்புவதாக காசி குல்மேன் ஃபைவ் தெரிவித்தார்.

அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு அளிக்கப்படுவது, கொலம்பியாவில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு மிகப்பெரிய உத்வேகம் அளிக்கும் என்று கொலம்பிய அதிபர் யுவான் மேனுவல் சாண்டோஸ் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:
அமைதி முயற்சிக்காக நோபல் பரிசு அறிவித்திருப்பது, கொலம்பியாவில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக்கு கொண்டு வர நாங்கள் முன்னெடுத்துள்ள முயற்சிகள் மேலும் தொடர வேண்டும் என்ற செய்தியைத் தெரிவிக்கின்றது. உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரவும், கொலம்பியாவில் அமைதியைக் கட்டமைப்பதற்கான தொடக்கத்தை ஏற்படுத்தவும் இந்த விருது மிகப்பெரிய உந்து சக்தியாக இருக்கும் என்றார்.

பொதுவாக்கெடுப்பில் சாண்டோஸின் அமைதி ஒப்பந்தம் தோற்கடிக்கப்பட்டாலும் இதுவரையல்லாத இந்த முயற்சி நிரந்தர அமைதித் தீர்வுக்கு அருகில் கொலம்பியாவைக் கொண்டு வந்துள்ளது

இந்த அமைதி ஒப்பந்தத்தை இறுதி வடிவம் பெறச் செய்து நிரந்தரமாக்கினால் தான் கொலம்பிய மக்கள் ஏழ்மை, சமூக அநீதி, போதை மருந்து குற்றங்கள் போன்ற பெரிய சவால்களை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும் என்பது மறைக்கவோ மறுக்கவோ முடியாத உண்மையாகும்.

Download As PDF

0 comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...

மின்னஞ்சல் ஊடாகக் கருத்துத் தெரிவிக்க

Name:
Email:
Comment: